இலங்கை பாராளுமன்றத்தின் சபை முதல்வர்
பாராளுமன்றத்தின் ஆளும் கட்சியின் அலுவல்களை தீர்மானிக்கும் விடயமானது அரசாங்கத்தினதும் பாராளுமன்றத்தினதும் முக்கியமானதொரு நபராக விளங்கும் பாராளுமன்றத்தின் முதல்வருக்கே சாட்டப்பட்டுள்ளது. சபைக்குள் அரசாங்கத்தின் அலுவல்களை, குறிப்பாக சட்டவாக்க சபையின் நிகழ்ச்சித் திட்டத்தை தயாரித்தல் அவருக்குரிய பணியாகும். அவர் ஒரு மூத்த அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சரும் ஆவார். அமைச்சரவையின் மூத்த உறுப்பினர் ஒருவரை சபை முதல்வராக நியமிப்பதற்கான உத்தரவு பிரதமரினால் பிறப்பிக்கப்படுகின்றது. அவ்விடயம் சபாநாயகருக்கு அறிவிக்கப்படுவதுடன் சபாநாயகர் அது தொடர்பாக பாராளுமன்றத்தில் முறையானதொரு அறிவிப்பை விடுப்பார்.
சபை முதல்வரின் முக்கியத்துவம் பாராளுமன்ற அலுவல்களில் அவர் செலுத்தும் செல்வாக்கின் மீது தங்கியிருக்கின்றது. அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டிய அலுவல்கள் தொடர்பான திகதிகளை முன்மொழிந்து அத்தகைய அலுவல்களில் முன்னுரிமை கிடைக்கவேண்டிய விடையங்களையும் அவரே தீர்மானிக்கின்றார்.
பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் அங்கம் வகிக்கும் சபை முதல்வர் அக்குழு கூட்டத்தின்போது பாராளுமன்றம் கூடும் வாரத்திற்கான தற்காலிக நிகழ்ச்சித் திட்டத்தை முன் மொழிகின்றார். ஒவ்வொரு மாதத்தின் முதலாவது அமர்வு இடம் பெறும் வாரத்தின் வெள்ளிக்கிழமை தவிர்ந்த ஏனைய அனைத்து கூட்டம் இடம்பெறும் நாட்களிலும் அரசாங்கத்தின் அலுவல்கள் முன்னுரிமை பெறுகின்றது. கூட்டம் நடைபெறும் வாரத்திற்கான தற்காலிக நிகழ்ச்சித் திட்டம் சபை முதல்வரினால் தயாரிக்கப்பட்ட பின்னர் கௌரவ சபாநாயகர் தலைமை வகிக்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் மேற்படி நிகழ்ச்சி நிரல் இணக்கம் எட்டப்படுவதற்காக அவர் முன்வைப்பார். அதற்கான இணக்கம் எட்டப்பட்டதும் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியின் முதற்கோலாசான்கள் தமது குழுவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மேற்படி நிகழ்ச்சித்திட்டம் குறித்து முன்கூட்டியே அறிவிக்கின்றனர்.
ஒவ்வொரு நாளும் சபை அலுவல்களின் ஆரம்பத்தின் போது அன்றைய தினத்திற்கான சபையின் நடைமுறை பற்றிய பிரேரணை மற்றும் சபையை ஒத்திவைப்பதற்கான பிரேரணை ஆகியவை பொதுவாக சபை முதல்வர் அவர்களினாலேயே முன்வைக்கப்படுகின்றது. பாராளுமன்றத்தில் மிகவும் மூத்த உறுப்பினர்களில் ஒருவராகிய அவர் சபையின் வழக்கங்கள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக நன்கு அறிந்தவராவார். அரசாங்கத்தின் சார்பில் சபாநாயகருக்கு ஆலோசனை வழங்குவதற்கு அவர் அனைத்து சந்தர்ப்பத்திலும் தயாராக இருப்பார். சபை கூடுகின்ற எல்லா சந்தர்ப்பங்களிலும் குறிப்பாக வாய்மூல விடைக்கான வினாக்கள் எழுப்பப்படும் போது அவர் சபையில் பிரசன்னமாக இருப்பதுடன் தனது வழிகாட்டலின் கீழ் சபையில் மற்றையவர்கள் உரையாற்றுவதற்கான உரிமையையும் கொண்டுள்ளார். ஒரு மரபாக, ஏதேனுமொரு விடயம் தொடர்பாக குறிப்பாக இரு தரப்பினராலும் பாரியளவில் பாராளுமன்ற அலுவல்கள் மீது தாக்கம் ஏற்படும் போது சபை முதல்வரின் கருத்து வினவப்படுகின்றது. தமது அன்றாட கடமை பணிகளின் போது பாராளுமன்ற சபை முதல்வர் முழு சபையினதும் பேச்சாளராகவும் பிரதிநிதியாகவும் செய்யப்படுகின்றார்.
அவர் பாராளுமன்றத்தையும் அமைச்சரவையும் தொடர்பு படுத்துகின்ற ஒருவராக இருப்பதால் பாராளுமன்றத்தின் கவனம் பெருமளவு ஈர்க்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக எப்போதும் அவதானத்துடன் இருந்து சம்பந்தபட்ட அனைத்து விடயங்களையும் அரசாங்கத்துக்கு அவரே அறிவிக்க வேண்டும்.
பாராளுமன்றத்தின் தெரிவுக்குழுவிலும் அங்கம் வகிக்கும் அவர் ஒவ்வொரு குழுக்களுக்குமான அரசாங்கக் கட்சியின் உறுப்பினர்களை நியமிக்கின்றார். மேலும், வெளிநாடுகளில் நடைபெறும் பல்வேறு பாராளுமன்ற கருத்தரங்குகள், விஜயங்கள் போன்றவற்றில் கலந்து கொள்ள வேண்டிய ஆளும்கட்சி உறுப்பினர்களையும் அவரே பெயரிடுகின்றார்.
அவர் நிலையியற் கட்டளைகள் தொடர்பான குழுவிலும் பாராளுமன்ற பணியாட்டொகுதி பற்றிய ஆலோசனைக் குழுவிலும் பதவி வழியில் அங்கம் வகிக்கின்றார்.
இலங்கைப் பாராளுமன்ற வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் இப் பதவியை வகித்துள்ளதுடன் அவர்களில் அனேகமானோர் பிரதமர் பதவியையும் வகித்துள்ளனர்