පාර්ලිමේන්තුවේ සභානායක කාර්යාලය
පාර්ලිමේන්තුවේ සභානායක කාර්යාලය

பாராளுமன்றத்தின் சபை முதல்வரின் அலுவலகத்தின்

OFFICE OF THE LEADER OF THE HOUSE OF PARLIAMENT

Hon Bimal Rathnayake

கௌரவ சபைத் தலைவர்


கௌரவ பிமல் ரத்நாயக்க


போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் மற்றும்
நாடாளுமன்ற சபைத் தலைவர்

அமைச்சர் பிமல் ரத்நாயக்க தனது ஆரம்ப கல்வியை தங்காலை லிட்டில் ஃப்ளவர் கான்வென்டில் பயின்றார், பின்னர் கொழும்பு ஆனந்த கல்லூரியில் கல்விப் பொதுத் தராதர உயர் தரம் வரை தனது கல்வியைத் தொடர்ந்தார். அதன் பின்னர், மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்திற்குத் தகுதி பெற்றார். பல்கலைக்கழகத்தில் சேரும் வரை ஒரு தனியார் வங்கியின் அந்நியச் செலாவணித் துறையில் பணிபுரிந்து தொழில் அனுபவத்தைப் பெற்றார், 1995 இல் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் சேர்ந்தார்.

அவர் 1989 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) மாணவர் பிரிவான சோஷலிச மாணவர் சங்கத்தில் சேர்ந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 1996 ஆம் ஆண்டு, மக்கள் விடுதலை முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி முழுநேர அரசியலில் நுழைந்தார். 1998 ஆம் ஆண்டு சோஷலிச மாணவர் சங்கத்தின் தேசிய அமைப்பாளராக தேர்வான அவர், அதே ஆண்டில் முதலமைச்சர் வேட்பாளராக மாகாண சபைத் தேர்தலில் வடமேல் மாகாணத்தில் போட்டியிட்டார், மேலும் ஜே.வி.பி.யின் வடமேல் மாகாண சபை வேட்பாளர் குழுவின் குழுத் தலைவராகவும் பணியாற்றினார். அதன்படி, ஜனவரி 1999 இல், அவர் வடமேல் மாகாண சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் மக்கள் விடுதலை முன்னணியின் குருநாகல் மாவட்ட அமைப்பாளராகவும் பணியாற்றினார். மேலும் 2000 ஆம் ஆண்டு குருநாகல் மாவட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி முதல் முறையாக நாடாளுமன்றத்திற்குத் தேர்வானார். மீண்டும் 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்வான அவர், விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசனத் துறை துணை அமைச்சரானார். அவர் 2000 ஆம் ஆண்டில் ஜே.வி.பி.யின் கல்விக் குழுவிற்கும், 2001 இல் ஜே.வி.பி.யின் மத்திய குழுவிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001 ஆம் ஆண்டு மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், மக்கள் விடுதலை முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அரசியலமைப்பின் 17 வது திருத்தத்தை நிறைவேற்றும் செயல்பாட்டில் முன்னிலை வகித்தார்.

2008 ஆம் ஆண்டில், அவர் மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞர் அமைப்பான சோஷலிச இளைஞர் சங்கத்தின் ஸ்தாபக தேசிய அமைப்பாளராக தேர்வானார். அவ்வாறே அவர் 2014 இல் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், தொடர்ந்து அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளராகவும் ஆனார். ஜே.வி.பியின் சர்வதேச உறவுகள் குழுவின் உறுப்பினராக அக்குழு தொடங்கப்பட்டதிலிருந்து இருந்து வரும் அவர், 2015 முதல் கட்சியின் சர்வதேச உறவுகள் பிரிவின் தலைவராகவும் செயற்பட்டு வருகிறார். மேலும் 2015 முதல் அவர் மக்கள் விடுதலை முன்னணியின் வட மாகாணத்திற்கான ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகிறார்.

அவர் 2015 ஆம் ஆண்டு மீண்டும் தேசியப் பட்டியல் எம்.பி.யாக தேர்வானார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில், மக்கள் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதில் அவர் மிகவும் சுறுசுறுப்பான பங்களிப்பை வழங்கினார். அவர் உயர் பதவிகள் பற்றிய குழு, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு, அரசாங்கக் கணக்குக் குழு, அரசாங்க நிதி பற்றிய குழு, மற்றும் பொது மனுக் குழு போன்ற நாடாளுமன்ற சிறப்புக் குழுக்களில் முனைப்புடன் பணியாற்றினார். மேலும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் செயல்பாடுகளுக்கும் ஆதரவு வழங்கியதுடன், சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். மேலும், மக்கள் விடுதலை முன்னணி சார்பாக கல்வி அமைச்சு தொடர்பான பிரச்சினைகளை ஒருங்கிணைக்கும் விடயத்தையும் பொறுப்பேற்றார், அத்துடன் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வழிநடத்தல் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.

2015-2020 காலகட்டத்தில் பாராளுமன்ற தலைவர் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார். இதன் போது இந்தியா, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா மற்றும் கனடாவில் நடைபெற்ற பயிற்சித் திட்டங்களிலும் பங்கேற்றார்.

2015 ஆம் ஆண்டு பாலஸ்தீன - இலங்கை நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயலாளராகவும், கியூபா - இலங்கை நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயலாளராகவும் பணியாற்றிய இவர், சீனா – இலங்கை, ரஷ்யா – இலங்கை, வியட்நாம் - இலங்கை மற்றும் ஈரான் - இலங்கை நட்புறவு சங்கங்களின் உறுப்பினராகவும் செயற்பட்டார். மேலும், காணாமல் போனோர் அலுவலகத்தை நிறுவுவதற்கான சட்டத்திலும் அவர் தலையிட்டு முனைப்புடன் செயற்பட்டதுடன், பல்வேறு அநீதிகள் மற்றும் ஓரங்கட்டல்களுக்கு ஆளான சமூகங்களின் உரிமைகளுக்காகவும் முன்னின்றார்.

உலக ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு, உலக அமைதி பேரவை, கம்யூனிஸ்ட் மற்றும் உழைக்கும் மக்கள் கட்சிகளின் சர்வதேச கூட்டம் போன்ற அமைப்புகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். மேலும், 2015 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட வியட்நாம் நட்புறவு அறக்கட்டளையின் தலைவராகவும், 2022 முதல் இலங்கை பாலஸ்தீன ஒற்றுமை அமைப்பின் இணைத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

2019 ஆண்டு முதல் மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து கட்டமைக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி என்ற அரசியல் கட்சியின் தேசிய நிர்வாக மற்றும் செயற்குழு உறுப்பினராக கடமையாற்றும் அவர் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தேசியப் பட்டியல் எம்.பி யாக நியமிக்கப்பட்டார். அவர் தற்போது போக்குவரத்து,நெடுஞ்சாலை,துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற முதல்வராக பணியாற்றி வருகிறார்.